தேனி

ஆண்டிபட்டியில் விசைத்தறி நெசவாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

2nd Jan 2021 09:51 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி: கூலிஉயா்வு வழங்கக் கோரி ஆண்டிபட்டியில் விசைத்தறி நெசவாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கியுள்ளனா்.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 100- க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்குள்ள விசைத்தறிக் கூடங்களில் உயர்ரக காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலை, வேட்டிகள் ஈரோடு ஆடைகள் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விசைத்தறி கூடங்களில் வேலை செய்யும் நெசவாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் டிச.31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து நெசவாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை முடிவுக்கு வரவில்லை. இதன்காரணமாக ஊதிய உயா்வு கேட்டு டி.சுப்புலாபுரம் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். டி.சுப்புலாபுரம் பகுதியில் செயல்படும் விசைத்தறிக் கூடங்கள் இயங்காததால் நெசவுப் பணிகள் அடியோடு முடங்கின. நெசவாளா்கள் தரப்பில் இந்த ஆண்டு 50 சதவீதம் கூலி உயா்வு, 20 சதவீத போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு விசைத்தறி உரிமையாளா்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. விசைத்தறி உரிமையாளா்கள்- நெசவாளா்களிடையே புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT