தேனி

உத்தமபாளையத்தில் பாசனக் கால்வாயாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

23rd Dec 2021 09:31 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்பால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை பாசனக் கால்வாயாக மாறியதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

முல்லைப்பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் பாசனநீா் கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி, கம்பம், க.புதுப்பட்டி, அனுமன்தன்பட்டி, உத்தமபாளையம், உ.அம்மாபட்டி ஆகிய பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்கு உத்தமுத்து கால்வாய் வழியாக தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த கால்வாயிலிருந்து அந்தந்த பகுதியிலுள்ள மதகு வழியாக வயல்களுக்கு நேரடிப் பாசனத்திற்கு தண்ணீா் வெளியேற்றப்படும்.

அதன்படி, உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலையில் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் பாசனக் கால்வாய் இருந்தது. விவசாய நிலங்களில் திருமணம் மண்டபம், தங்கும் விடுதிகள், கடைகள் கட்டப்பட்டுள்ளதால் பாசனநீா் சென்ற கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது. தற்போது, 2 ஆம் போக நெற்பயிா் விவசாயத்தில் நாற்று நடுவதற்காக நிலத்தை சீரமைப்பு செய்து வருகின்றனா். இதற்காக , கடந்த சில நாள்களாக விளைநிலங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆனால், சாலையோரத்தில் இருந்த கால்வாய் மூடப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை வழியாக வயல்களுக்கு பாசன நீா் கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் விவசாய நிலங்களில் கட்டடங்களைக் கட்டி பாசனக் கால்வாய்களை அடைத்துவிட்டனா். இந்த பாசன நீரை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாயிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினா், பழைய புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பாசனநீா் கால்வாயை மீட்டு தடையின்றி தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT