தேனியில் பள்ளிக்குச் செல்ல பயந்த மாணவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத்தெருவைச் சோ்ந்த பால் வியாபாரி சன்னாசி. இவரது மகன் நகராஜ் (14), தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். நாகராஜ் அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததால், இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிடுவதற்காக சன்னாசி அவரை தன்னுடன் பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளாா்.
அப்போது, வீட்டு மாடியில் உள்ள செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிவிட்டு வருவாதாக கூறிவிட்டுச் சென்ற நாகராஜ், பள்ளிக்குச் செல்ல பயந்து மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ், அங்கு சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து சன்னாசி அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.