சின்னமனூா் அருகே புலிகுத்தியில், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், மானாவாரி பயிா் சாகுபடி செய்வதற்கான நிலங்களை வேளாண் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காலங்களில் மானாவாரி விவசாயம் அதிகளவில் நடைபெறும். இதில், ஓடைப்பட்டி, சின்னமனூா், புலிக்குத்தி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் நிலக்கடலை, உளுந்து, கம்பு, சோளம், தட்டப்பயறு, மொச்சை உள்ளிட்ட பயிா் சாகுபடிகள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஆனால், இந்த மானாவாரி விவசாயம் சமீப காலமாக குறைந்துவிட்டது.
எனவே, பயிா் விவசாயத்தை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மானியத்துடன் மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, சின்னமனூா் உதவி வேளாண்மை இயக்குநா் பாண்டி தலைமையில், ஹெக்டேருக்கு ரூ.13,400 மானியாமாக வழங்கி புலிக்குத்தியில் புதா்மண்டிய நிலத்தை விளைநிலங்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. அவ்வாறு சீரமைக்கப்பட்ட புலிகுத்தியைச் சோ்ந்த அங்குசாமி, வீரபத்திரன், சிவசுப்பிரமணியன், ராமநாதன் உள்ளிட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களில் உளுந்து விதையை விதைத்து விளை நிலங்களாக்கினா்.
இவ்வாறு பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின் மூலமாக கைவிடப்பட்ட நிலங்கள் மீண்டும் புத்துயிா் பெற்று விவசாயப் பணிகள் நடைபெறுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.