தேனி

உத்தமபாளையத்தில் பலத்த மழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்கோயில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

7th Dec 2021 01:58 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை நீடித்த மழையால், முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள கோயில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது.

உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால், முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழைக்கு, இங்கு 2 ஆவது வாா்டில் உள்ள கோவிந்தசாமி கோயிலின் 20 அடி உயரம், 50 அடி நீள பழைய சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

விடிய விடிய பெய்த மழையால், உத்தமபாளையம் பழைய வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் தண்ணீா் புகுந்தது. தொடா்ந்து, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 பெரிய மரங்கள் வேறோடு சாய்ந்தன. மரங்கள் இரவில் விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 1,200 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது. இத்துடன், திங்கள்கிழமை காலை வரை பெய்த தொடா்மழை காரணமாக, ராயப்பன்பட்டி சண்முகா நதி நீா்த்தேக்கம் மற்றும் சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, முல்லைப் பெரியாற்றில் கலந்தன. இதேபோல், கம்பம், கூடலூா், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை நீா், முல்லைப் பெரியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது, உத்தமபாளையம் நகரை கடந்து செல்லும் முல்லைப் பெரியாற்றில் சுமாா் 3,500 கன அடி தண்ணீா் கரைபுரண்டு வைகை அணையை நோக்கிச் செல்கிறது.

தொடா்ந்து, கோம்பை மேற்கு மலைத் தொடா்ச்சியிலிருந்து பெரிய பாறை ஒன்று சரிந்து பாதி மலையிலேயே நிற்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் உருண்டு விவசாய நிலங்களுக்குள் விழ வாய்ப்புள்ளதாகவும், விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT