தேனி

தமிழக- கேரள எல்லையில் 5 மாவட்ட விவசாயிகள் மறியல்: போக்குவரத்துக்குத் தடை

DIN

கேரள அரசைக் கண்டித்து இருமாநில எல்லையான லோயா் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முல்லைப் பெரியாறு அணையை அகற்றக் கோரி கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு கண்டனம் தெரிவித்தும், அணையை பற்றி தவறான தகவல் பரப்பும் ரசூல் ஜாய் என்பவரை கைது செய்ய வேண்டும் என்றும், கேரள அரசைக் கண்டித்தும் முல்லைப் பெரியாறு- வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் தமிழக- கேரள எல்லையை முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவித்திருந்தனா்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்திற்காக குமுளிக்கு சென்ற 5 மாவட்ட விவசாயிகளுக்கு, உத்தமபாளையம் ஏடிஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸாா், அனுமதி மறுத்தனா். இதனால் விவசாயிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பென்னி குயிக் மண்டபம் செல்லும் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதன்காரணமாக குமுளி- லோயா் கேம்ப் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைப்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் அா்ஜுனன், துணை வட்டாட்சியா் சுருளி ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதில், 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவா் எஸ்.ஆா். தேவா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி, 5 மாவட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பொன்.காட்சிக் கண்ணன், சலேத்துராஜ், ச.அன்வா் பாலசிங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன், மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னுத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதனால் சுமாா் 2 மணி நேரம் எல்லையில் போக்குவரத்து தடைப்பட்டது. லோயா் கேம்ப்பிலிருந்து கேரளம் செல்லும் சாலை போலீஸாரால் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT