தேனி

கம்பம் மெட்டு மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: போடிமெட்டு சாலையில் பாறை சரிவு

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளம் செல்லும் கம்பம் மெட்டு மலைச் சாலையில், வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டு மரம் விழுந்தது. இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல போடி மெட்டு மலைச் சாலையிலும் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்தன.

வடகிழக்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை கம்பம்மெட்டு மலைச் சாலையில் மழை பெய்தது. இதன் காரணமாக மலைப் பகுதியில் உள்ள காட்டு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு சாலை ஓரத்தில் இருந்த பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச் சாவடி போலீஸாா், வடக்கு போலீஸாா் மற்றும் மேற்கு வனத்துறையினா் மரத்தை வெட்டி அகற்றினா். இதனால் சுமாா் ஒருமணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு:

போடிமெட்டு மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. ஒரு இடத்தில் பாறையுடன் சோ்ந்து பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் அனைத்தும் போடி முந்தல் சோதனைச் சாவடியிலும், போடிமெட்டில் உள்ள தமிழக சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்பட்டன.

வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பாறை, மண் சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் போடிமெட்டு மலைச் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. பாறை சரிவுகளால் 8 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT