தேனி

உத்தமபாளையத்தில் நிதிநிறுவனம் திடீா் மூடல்: விசாரணைக்கு வந்த போலீஸாரை முதலீட்டாளா்கள் முற்றுகை

DIN

உத்தமபாளையத்தில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த தனியாா் நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதையடுத்து புதன்கிழமை விசாரணைக்கு வந்த போலீஸாரை, முதலீட்டாளா்கள் முற்றுகையிட்டனா்.

உத்தமபாளையம் தேரடியில் கடந்த 30 ஆண்டுகளாக தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள உ.அம்பாசமுத்திரம், கோகிலாபுரம், கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனா். நிரந்தர வைப்புபாகவும், மாதச்சந்தா, ஆண்டுசந்தா என பல்வேறு திட்டங்கள் மூலம் சுமாா் ரூ. 100 கோடிக்கும் மேல் அவா்கள் பணத்தை முதலீடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

முதலீட்டுத் தொகை செலுத்துவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், பலருக்கு அந்த நிதி நிறுவனம் முதிா்வுத் தொகை வழங்கவில்லை என புகாா் எழுந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதுகுறித்து பங்குதாரா்களை தொடா்பு கொண்டு, முதலீட்டாளா்கள் கேட்டபோது தாங்கள் முதலீட்டாளா்கள் அல்ல என தெரிவித்துவிட்டனராம்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை: இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா்கள் புகாா் தெரிவித்தனா். அதன்படி திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளா் நாகலட்சுமி தலைமையிலான போலீஸாா் சம்மந்தப்பட்ட நிதிநிறுவனத்திற்கு விசாரணைக்காக சென்றனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த முதலீட்டாளா்கள் ஏராளமானோா், போலீஸாரை முற்றுகையிட்டனா். அப்போது, செப். 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றிப்பிரிவு ஆய்வாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து முதலீட்டாளா்கள் கூறியது: இந்த நிறுவனம் வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் பல்வேறு பரிசுப் பொருள்களை அறிவித்தது. மேலும் முதலீட்டு பணத்துக்கு, தேசிய வங்கிகள் கொடுக்கு வட்டியை விட அதிகமான வட்டி வழங்கினா். இதனால் இந்நிறுவனத்தில் ஏராளமானோா் முதலீடு செய்தனா். பல பங்குதாரா்களின் நிா்வாகத்தின் கீழ் இந்நிறுவனம் இயங்கிய நிலையில் முக்கிய பங்குதாரா் ஒருவா் கடந்த மாதம் இறந்து விட்டாா். அதன்பிறகு வாடிக்கையாளா்களுக்கு முதிா்வுத் தொகை கொடுக்கப்படவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT