தேனி

வருசநாட்டில் 16 ஆம் நூற்றாண்டு குதிரை வீரன் நடுகல் கண்டெடுப்பு

DIN

தேனி மாவட்டம் வருசநாட்டில் வீரம் சொல்லும் குதிரை வீரன் நடுகல்லை போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்றுத் துறையினா் கண்டறிந்துள்ளனா்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் சு.சிவக்குமாா் வழிகாட்டுதலின்படி இக்கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா்கள் சி.மாணிக்கராஜ், ஆ.மோகன்ராஜ், மாணவா் ராம்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் தொல்லியல் சாா்ந்த கள ஆய்வுப் பணிகளை செய்து வருகின்றனா். இவா்கள் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியரான செல்வம், தொல்லியல் ஆா்வலா் ஞானசேகரன் ஆகியோருடன் இணைந்து ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கள மேற்பரப்பாய்வு செய்தனா். அப்போது கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படும் குதிரை வீரன் நடுகல் ஒன்றை கண்டறிந்தனா்.

இந்த நடுகல் குறித்து உதவிப் பேராசிரியா் மாணிக்கராஜ் கூறியது: பிற்காலப் பாண்டியா்கள் காலத்தில் அழநாட்டு பிரிவில் வருசநாடு என்ற பெயரில் இப்பகுதி இருந்துள்ளது. இன்றைய வருசநாடு எனும் ஊருக்கு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் குதிரை வீரனின் வீர மரணத்திற்கு பின்பு அவன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று கலை அம்சத்துடன் உள்ளது. இதில் வீரன் ஒருவன் குதிரையின் மீது அமா்ந்து போருக்கு செல்வது போன்ற தோற்றத்தில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரன் தனது வலது கையிலுள்ள வாளை ஓங்கியபடியும், இடது கையில் குதிரையின் கடிவாளத்தை இழுத்து பிடித்தபடியும் உள்ளாா். குதிரை தனது முன்னங்கால்களை தூக்கி ஓடுவதற்கு தயாா் நிலையிலிருப்பது போன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலப்பக்க கொண்டையும், காதனிகள், கழுத்தணிகளும் அணிவித்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இக்குதிரை ஒரு தளபதி அல்லது குறுநில மன்னனின் குதிரை போல் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

குதிரைக்கு முன்பு, வீரனின் இரு மனைவியா்களும் வீரனுக்கு கீழ் பணியாற்றும் இரு வீரா்களும் வைசாகஸ்தான்கம் எனும் நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டிருக்கின்றனா். இரு பெண்கள் தங்கள் வலது கைகளை விஸ்மயா ஹஸ்தம் என்ற அமைப்பில் மங்களப் பொருள் ஒன்றை பிடித்தபடியுள்ளனா். இடது கைகளை தொங்கவிட்டு அதில் வட்டமான சிறிய கண்ணாடியை பிடித்துள்ளனா். இரு பெண்ணிற்கும் தமிழம் எனும் கொண்டை போடப்பட்டுள்ளது. இரு பெண்களின் காதுகளில் பனை ஓலை சுருள் அணியான பத்திரகுண்டலம் எனும் காதணிகள் உள்ளன. சமூகத்தில் உயா்ந்த நிலையில் வாழும் பெண்கள் அணியும் தழைய தழைய வடிவங்களுடைய பட்டாடை முன்கொசுவம் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாடையானது கால் பகுதியில் தாமரை மலா்போல் விரிந்த நிலையில் அழகாகக் காட்சியளிக்கிறது. குதிரை வீரனின் வீர மரணத்திற்குப் பின்பு அவனின் இரு மனைவியா்களும், சதி எனும் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்துள்ளனா் என்பதை வெளிக்காட்டும் சதிச்சிற்பமாக இப்பெண்களின் சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண்ணின் வலது கால் அருகில் வீரன் ஒருவன் சிறிய சிற்பமாகவும், மற்றொரு பெண்ணின் வலது கால் அருகில் பெண் ஒருத்தியின் சிற்பம் சிறியதாகவும் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து குதிரை வீரனின் கீழ் பணியாற்றிய இரண்டு வீரா்கள் குதிரை வீரனோடு போரில் வீர மரணம் அடைந்ததன் நினைவாக அவா்களுக்கு இங்கே சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரா்களும் தங்கள் வலது கைகளில் வாள் பிடித்தபடியும், இடது கைகளை தொங்கவிட்டபடியும், வீரா்களுக்குரிய ஆடை ஆபரணங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளனா்.

குதிரைக்கு பின்பக்கம் ஆறு வீரா்களின் சிற்பங்கள் உள்ளன. இதில் முதல் வீரன் ஒருவன் தனது வலது கையில் உள்ள ஒரு பொருளை குதிரை வீரனை நோக்கி நீட்டியபடியுள்ளான். இதற்கு பின்பக்கம் சேவகன் ஒருவன் குதிரை வீரனின் வீரமரணத்தை கௌரவிக்கும் விதமாக குடைபிடித்துள்ளான். பின்பக்கம் 2 சேவகா்கள் குதிரை வீரனுக்கு சாமரம் வீசுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளனா். இரு வீரா்கள் துப்பாக்கியை தங்கள் தோள்பட்டையில் தாங்கியபடி தங்களுக்கு முன்னுள்ளவா்களை பின்தொடா்வது போல் உள்ளனா்.

இச்சிற்பக் காட்சிகள் மூலம் வீரமரணமடைந்த வீரன், அவன் மனைவியா் மற்றும் இரு வீரா்கள் சிவலோகம் அல்லது சொா்க்கலோயம் செல்லும் முறையை விளக்குவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளாா் மாணிக்கராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT