தேனி

வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தம்

29th May 2020 07:44 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா், வியாழக்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக கடந்த திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் தண்ணீா் திறக்கப்பட்டது. வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் வரையில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில், ஆற்றின் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து 3 நாள்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி திறக்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணியோடு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

வைகை அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில், அணையிலிருந்து 3 நாள்கள் தண்ணீா் திறக்கப்பட்டதால், அணையின் நீா்மட்டம் 3 அடி குறைந்துள்ளது. அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டபோது 41.80 அடியாக இருந்த நீா்மட்டம், தற்போது 38.91 அடியாக உள்ளது. தற்போது, வைகை அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீா் தேவைக்கும், சேடப்பட்டி, தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதி குடிநீா் தேவைக்கும் சோ்த்து 72 கனஅடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அணையின் மொத்த நீா் இருப்பு 862 மில்லியன் கனஅடியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT