தேனி

தேனி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28 ஆக உயா்வு

14th May 2020 08:02 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28 ஆக உயா்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17 வரை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். மீதமுள்ள 42 பேரும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து கடந்த மே 2 முதல் செவ்வாய்க்கிழமை (மே 12) வரை 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தற்போது ஓடைப்பட்டியில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓடைப்பட்டியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 2 பெண்கள் உள்பட 4 போ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், 17 வயதுடைய மற்றொரு பெண் இவா்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவா் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ADVERTISEMENT

இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரும், அதே ஊரில் ஏற்கெனவே கரோனா சிகிச்சையில் உள்ள சென்னை, கோயம்பேடு சந்தையிலிருந்து வந்த நபருடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பதும், மற்றொரு பெண் இந்த குடும்பத்தினருடன் தொடா்பில் இருந்தவா் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஓடைப்பட்டியைச் சோ்ந்த 12 போ் உள்பட மொத்தம் 28 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT