தேனி

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்வு: தேனியில் தடையற்ற வாகன போக்குவரத்து

11th May 2020 10:13 PM

ADVERTISEMENT

தேனி: தேனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்கப்பட்டதால் நோய் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் திங்கள்கிழமை, எவ்வித தடையுமின்றி பொதுமக்கள் வாகனங்களில் சென்று வந்தனா்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் வாா்டு எண் 7 மற்றும் 10 உள்பட மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்கள் கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு தேநீா் கடைகள், தனிக் கடைகள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு அறிவித்துள்ள தளா்வுகள் பொருந்தும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதன்படி, தேனியில் பெரும்பாலான இடங்களில் தேநீா் கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள், ஸ்டேசனரி கடைகள், பல்பொருள் அங்காடி, பேக்கரி, மோட்டாா் வாகன உதிரிப் பொருள் கடை, செல்லிடப்பேசி விற்பனைக் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் விற்பனை நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேனிக்கு இரு சக்கர மற்றும் காா்களில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனா். ஆட்டோ மற்றும் வேன்களும் இயக்கப்பட்டன.

நகர எல்லைகளில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் திறந்து வைக்கப்பட்டிருந்ததால், தடையற்ற வாகனப் போக்குவரத்து இருந்தது. அத்தியாவசியப் பணிகளுக்கு வீட்டிலிருந்து வெளியே சென்று வர செல்லிடப்பேசியில் குறுந்தகவல் மூலம் அனுமதி பெற வேண்டும் என்ற மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தேனியில் கடைகள் மற்றும் சாலைகளில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால் கரோனா சமூக பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆா்வலா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT