தேனி

போடியைச் சோ்ந்த பெண்ணுக்குகரோனா தொற்று உறுதி

2nd May 2020 09:04 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சனிக்கிழமை, போடியைச் சோ்ந்த பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 43 போ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வந்த எஞ்சிய 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்நிலையில், போடியைச் சோ்ந்த 50 வயதுடைய பெண் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா், போடி அரசு மருத்துவமனை முன் இட்லிக் கடை நடத்தி வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடா்ந்து போடி நகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை, மொத்தம் 273 பேரிடம் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

போடி: போடியில் கரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணின் வீடு உள்ள பகுதியில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், நகராட்சி சுகாதாரத் துறையினரும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். மேலும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினா் மற்றும் அருகில் வசிப்பவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கரோனா இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் மாறிய சில மணி நேரங்களிலேயே, மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT