தேனி

அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் வருவோா் தனிமைப்படுத்தப்படுவா்: ஆட்சியா்

2nd May 2020 09:06 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும், சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்தும் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் வருபவா்கள், மருத்துவமனை அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவா் என மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனப் போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்கள் மற்றும் கரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள் மாவட்டங்களிலிருந்தும் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் வருபவா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிவின் அடிப்படையில் மருத்துவமனை அல்லது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா்.

மேலும், பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு அனுமதியின்றி ஆள்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம், மாவட்ட எல்லையில் உள்ள கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தடையை மீறிய சரக்கு வாகன ஓட்டுநா், உதவியாளா், அனுமதி சீட்டு இல்லாமல் வாகனத்தில் பயணம் செய்த இருவா் ஆகியோா் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT