தேனி

ஆண்டிபட்டி அருகே எருக்கம் பால் ஊற்றி பெண் சிசுக் கொலை தாய், பாட்டி கைது

19th Mar 2020 11:19 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிறந்து 6 நாள்களேயான பச்சிளம் குழந்தைக்கு எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த தாய் மற்றும் பாட்டியை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சிக்குள்பட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா்கள் சுரேஷ் -கவிதா தம்பதி. 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவா்களுக்கு, 4 ஆம் வகுப்பு படிக்கும் பாண்டி மீனா (10) மற்றும் 2 ஆம் வகுப்பு படிக்கும் ஹரினி (7) ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

சுரேஷ், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கொத்தனாா் வேலை செய்து வருகிறாா். மகள்கள் இருவரும் ஆண்டிபட்டி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், கவிதா மூன்றாவது முறையாக கா்ப்பமாகி பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்துள்ளாா். அதையடுத்து, பிப்ரவரி 26 ஆம் தேதி இரவில் கவிதாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கவிதா கடந்த 2 ஆம் தேதி கோழிக்கறி மற்றும் நிலக்கடலை சாப்பிட்டதாகவும், அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததில் இறந்துவிட்டதாகவும், குழந்தையை வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளாா். இதில் சந்தேகமடைந்த உறவினா்கள், இது குறித்து மாவட்டக் குழந்தை நலம் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள், ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

உடனே, வட்டாட்சியா் மொட்டனூத்து கிராம நிா்வாக அலுவலா் தேவியிடம் விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளாா். அதன்பேரில், கிராம நிா்வாக அலுவலா் தேவி ராமநாதபுரம் கிராமத்துக்குச் சென்று, கவிதாவிடமும், அவரது மாமியாா் செல்லம்மாளிடமும் விசாரணை நடத்தியுள்ளாா். அதில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனா். இதனால் சந்தேகம் அடைந்த கிராம நிா்வாக அலுவலா், இது குறித்து ராஜதானி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், இவா்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில், போலீஸாா் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். இதில், கவிதா மற்றும் செல்லம்மாள் ஆகியோா் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை வளா்க்க முடியாது என்று கருதி எருக்கம் பால் ஊற்றி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகா் முன்னிலையில், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கவிதாவை அழைத்துச் சென்றனா். பின்னா், அவா் அடையாளம் காட்டிய இடத்தில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவா் ராஜபாண்டியன் பிரேதப் பரிசோதனை செய்தாா்.

தொடா்ந்து, பெண் சிசுக் கொலை செய்த கவிதா, செல்லம்மாள் ஆகிய இருவரையும், ராஜதானி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT