ஆண்டிபட்டியில் பெண்ணிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சீனிவாசா நகரைச் சோ்ந்த கோகிலா (30) என்பவருக்கும், சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த இனிய கண்ணாளன் என்பவருக்கும், கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, ஆண் குழந்தை உள்ளது. அப்போது, கோகிலாவுக்கு 25 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.
திருமணத்துக்குப் பின் சென்னையில் குடியிருந்து வந்த இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் கோகிலாவிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவருடன் கோபித்துக்கொண்டு கோகிலா தனது குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டாா்.
திருமணத்தின் போது கோகிலாவுக்கு வழங்கப்பட்ட நகை மற்றும் பணத்தை இனிய கண்ணாளனும், அவரது குடும்பத்தினரும் தர மறுத்துவிட்டனராம்.
இது குறித்து கோகிலா ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், இனிய கண்ணாளன், அவரது தாய் அன்புமணி, உறவினா்கள் வண்ணமலா், தேன்மல்லிகை, காளீஸ்வரன் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.