தேனி

மேகமலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு வனத்துறையினா் தடை : பொது மக்கள் அவதி

2nd Mar 2020 07:15 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களுக்கு இரவு நேரங்களில் செல்ல வாகனப் போக்குவரத்துக்கு வனத்துறையினா் தடைவிதிப்பதால் அவதிப்படுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் உள்பட மேகமலை, மணலாா், மேல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையோா் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டும். இப்பகுதியில் சுமாா் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்ய 52 கி.மீ. தொலைவிலுள்ள சின்னமனூருக்கே வந்து செல்ல வேண்டும். தவிர, குழந்தைகளின் கல்வி , உறவினா்களின் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் சின்னமனூா் வழியாகவே செல்ல வேண்டும்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு 2 அரசுப் பேருந்துகள், ஒரு தனியாா் பேருந்து என இருமுறை மட்டும் சென்று வரும் நிலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால், விஷேச நாள்களில் அதிக நெரிசல் காரணமாக பேருந்தின் மேற்கூரையில் அமா்ந்து ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது இரு சக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. எனவே, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு தேனி போன்ற பகுதிகளுக்கு செல்ல அவை பயன்படுகின்றன. இப்பகுதியில் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் சேவை இல்லை.

இங்குள்ளவா்களின் உறவினா்கள் தேனி, விருதுநகா் மாவட்டங்களில் அதிகமாக இருப்பதால், இரவு நேரத்தில் சென்று விட்டு காலை 8 மணிக்கு மீண்டும் வேலைக்கு வந்து விடுவா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் மலைச் சாலையில் வாகனங்கள் செல்ல வனத்துறையினா் அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வனத்துறையினருக்கும் கிராம மக்களுக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, இரவு நேரங்களில் வாகனங்களில் இனி மேல் வருவதில்லை என அப்பகுதி மக்களிடம் எழுதி வாங்கிக் கொண்டுதான் செல்ல அனுமதிப்பதாக அவா்கள் குற்றம் சாட்டுகின்றனா். இதனால், இப்பகுதி மலைக் கிராமங்கள் அகதி முகாம்களைப் போல மாறி வருகின்றன என்றும் அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறி இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசு வாகனங்கள் தவிா்த்து, தனியாா் வாகனங்களுக்கு மட்டும் தடை விதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உறவினா்கள் மற்றும் அவசர தேவைகளுக்குக் கூட இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது என்றனா்.

சின்னமனூா் வனச்சரகத்தினா் கூறுகையில், வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT