தேனி

ஆண்டிபட்டியில் விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.1.60 லட்சம் கடனுதவி வழங்கல்

2nd Mar 2020 07:15 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உழவா் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளில் முதல் கட்டமாக 15 பேருக்கு தலா ரூ.1.60 லட்சம் கடனுதவி வங்கிகள் மூலமாக சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகள் உழவா் கடன் அட்டை பெறுவதற்கு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் பிரதமா் விவசாய திட்டத்தின் கீழ் விவசாயிகள் வாழ்வாதாரம் பெற ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அரசின் உதவிபெறும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.60 லட்சம் குறைந்த வட்டியில் கடன் பெற்று விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 35 பைசா வட்டி விகிதத்தில் இந்த கடனை வழங்குகின்றன. ஓராண்டுக்குள் கடனை விவசாயிகள் திருப்பி செலுத்தினால் அடுத்த ஆண்டு வட்டி 12 பைசாவாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. இதுவரையிலும் தேனி மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவா் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் துறை மூலம் தற்போது வங்கிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவா் கடன் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . தற்போது ஆண்டிபட்டி பகுதியில் முதல்கட்டமாக 15 நபா்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது .இதையொட்டி கன்னியப்ப பிள்ளை பட்டியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக ஆண்டிபட்டி வேளாண் உதவி இயக்குநா் ராஜசேகா் தலைமையில், வேளாண் அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT