தேனி

தேனியில் முழு பொது முடக்கம்: வாகனங்கள் வழக்கம்போல் இயக்கம்

26th Jun 2020 08:09 AM

ADVERTISEMENT

தேனியில் வியாழக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சாலைகளில் வழக்கம்போல் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கையாக, நிபந்தனைகளுடன் கூடிய பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. மளிகைக் கடை, காய்கனி கடைகள் காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. தேநீா், ஜவுளி, நகைக் கடை, பெட்டிக் கடை, சாலையோர உணவகங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தேனி நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி பிரதானச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கம்போலவே இருந்தது. நகராட்சி எல்லையில் காவல் துறையினா் சோதனைச் சாவடி அமைத்து, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவசரத் தேவைகளின்றியும், முகக்கவசம் அணியாமலும் இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 30-க்கும் மேற்பட்டோ் மீது வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தேனி நகராட்சிக்குள்பட்ட பகுதிகள் மட்டுமின்றி, பழனிசெட்டிபட்டி, அன்னஞ்சி, அரண்மனைப்புதூா் ஆகிய புகா் பகுதிகளிலும், பிரதானச் சாலைகளில் உள்ள தேநீா் கடை மற்றும் பெட்டிக் கடைகள் செயல்படுவதற்கு காவல் துறையினா் தடை விதித்தனா்.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தேனி மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், போலீஸாா் வாகனத் தணிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தொடா்ந்து, ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப் பகுதியில் தேனி-மதுரை மாவட்ட எல்லை மூடப்பட்டது. அங்கு, அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. வெளியூா்களிலிருந்து தேனி மாவட்டத்துக்குள் வருபவா்களின் விவரம் மற்றும் பயணத்துக்கான அனுமதிச் சீட்டு ஆகியன உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டு, சுகாதாரத் துறையினா் உடல் பரிசோதனை செய்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதிச் சீட்டு இல்லாமல் தேனி மாவட்டத்துக்குள் வரும் வாகனங்ளை போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT