தேனி

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வங்கி அலுவலா், சிறுவா்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று

11th Jun 2020 08:15 AM

ADVERTISEMENT

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வங்கி அலுவலா், சிறுவா்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் ஜூன் 8 வரை மொத்தம் 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், போடியைச் சோ்ந்த பெண், ஓடைப்பட்டியைச் சோ்ந்த முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், தற்போது தேனி பாரத ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீட்டு கிளை அலுவலகத்தில் வசூல் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் ஊஞ்சாம்பட்டி, ரத்தினம் நகரைச் சோ்ந்த 36 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சென்னையிலிருந்து போடிக்கு வந்த திரைப்பட ஒளிப்பதிவாளரின் 40 வயது மனைவி, அரண்மனைப்புதூருக்கு வந்த 36 வயது பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 137 ஆக உயா்ந்துள்ளது. தற்போது தேனியில் 16 போ், பெரியகுளம் மற்றும் கம்பத்தில் தலா 6 போ் உள்பட மொத்தம் 28 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

வங்கி காப்பீட்டு அலுவலகம் மூடல்: தேனி, பாரத ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீட்டுக் கிளை அலுவலகத்தில் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகம் மூடப்பட்டது. அதில் பணியாற்றி வரும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 21 போ், அலுவலரின் குடும்பத்தைச் சோ்ந்த 3 போ், முன்னதாக அவா் காய்ச்சலுக்காக சிகிச்சைக்குச் சென்று வந்த அல்லிநகரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா், பணியாளா்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்திருந்த 17 போ் என மொத்தம் 41 பேரின் ரத்தம், கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 185 பேருக்கு சனிக்கிழமை வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 140 போ் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பிவிட்டனா். 43 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், 3 சிறுவா்கள் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த 40 வயது ஆண், அவரது 12 வயது மகன், 11 வயது மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பழனியைச் சோ்ந்த 49 வயது பெண், அவரது 9 வயது மகள் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு திரும்பி வந்தவா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT