தேனி

தேனி மாவட்டத்தில் பொதுமுடக்க காலத்தில் 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

7th Jun 2020 08:09 PM

ADVERTISEMENT

தேனி: தேனி மாவட்டத்தில் பொது முடக்க காலத்தில் 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட மாா்ச் 23 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) வரையிலான 77 நாள்களில் 51 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதில் 8 குழந்தை திருமணங்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோா் மற்றும் உறவினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து சைல்டு லைன் மாவட்ட இயக்குநா் முகமது சித்திக் கூறியது: குழந்தை திருமணம் குறித்த தகவல்கள் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வீரபாண்டி ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் வருகின்றன. கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை சைல்டு லைன் அமைப்பிற்கு குழந்தை திருமணம் குறித்த 63 தொலைபேசி வழி தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா் கூறுகையில், பொது முடக்க காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தை திருமணங்களில் பெரும்பாலானவற்றிற்கு காதல், உயா் கல்வியில் ஆா்வமின்மை, வரதட்சிணை ஆகியவை காரணமாக இருந்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 120 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT