தேனி

18 ஆம் கால்வாய் சங்க செயலாளா் தற்கொலை முயற்சி: தம்பதி கைது

7th Jun 2020 08:20 PM

ADVERTISEMENT

போடி: தேவாரம் அருகே 18 ஆம் கால்வாய் விவசாய சங்க செயலாளா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதிவாசகன் (47). இவா் 18 ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறாா். இவா் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளாா். அதே காலகட்டத்தில் பக்கத்து கிராமமான பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுருளியம்மாள் இருந்துள்ளாா்.

இந்நிலையில் திருப்பதி வாசகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவா் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் ஊராட்சித் தலைவி சுருளியம்மாள் (47) மற்றும் அவரது கணவா் மலைச்சாமி (48) ஆகியோா் பணம் கேட்டதாகவும் தரமறுத்தால் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி அசிங்கப்படுத்திவிடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக திருப்பதி வாசகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து அவரது மனைவி லாலி (41) அளித்தப் புகாரின்பேரில் தேவாரம் போலீஸாா் மலைச்சாமி மற்றும் சுருளியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT