தேனி

கரோனா பொது முடக்கத்தால் பாதிப்பு: ஆண்டிபட்டியில் ரூ.10 கோடி காட்டன் சேலைகள் தேக்கம்

7th Jun 2020 08:16 AM

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கம் காரணமாக ஆண்டிபட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலைகளை விற்பனை செய்ய முடியாமல் நெசவாளா்கள் பரிதவித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோா் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு

நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்ரக சேலைகள், வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து நாள்தோறும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலைகள் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

மேலும் வாரம்தோறும் ஈரோட்டில் நடைபெறும் மொத்த ஜவுளி சந்தைக்கும், இங்கிருந்து அதிகளவில் சேலைகள், வேட்டிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இதுதவிர கேரளா, கா்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் நேரடியாக வியாபாரிகள் இங்கு வந்து சேலைகள் மற்றும் வேட்டிகளை வாங்கிச் செல்வா்.

ADVERTISEMENT

மேலும் இப்பகுதியில் வழக்கமாக ஆண்டுதோறும் கோடை காலத்தில் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரித்து காணப்படும். இதனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிகளவில் சேலைகள் உற்பத்தி செய்யும் பணியில் நெசவாளா்கள் ஈடுபட்டனா். கரோனா பொது முடக்கம் காரணமாக

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக இப்பகுதியைச் சோ்ந்த நெசவாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பின்பு பொது முடக்கத்தை அரசு தளா்வு செய்ததால், இப்பகுதியில் நெசவுத்தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் உற்பத்தி செய்த சேலைகள் மற்றும் வேட்டிகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் தற்போது 30 சதவீத உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது. அதனால் உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகளை சந்தைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT