தேனி

போடியில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: கட்டுப்பாடுகளுடன் வா்த்தக நிறுவனங்கள் திறப்பு

25th Jul 2020 08:10 AM

ADVERTISEMENT

போடியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை வா்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் போடி நகராட்சி பகுதியில் 33 வாா்டுகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜூலை 10 ஆம் தேதி முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை அனைத்து வா்த்தக நிறுவனங்களையும் மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது. அதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இருப்பினும் போடியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்படி போடியில் ஜூலை 14 ஆம் தேதி 3 பேருக்கும், 15- இல் 10 பேருக்கும், 16 ஆம் தேதி 19 பேருக்கும், 17- இல் 32 பேருக்கும், 18 ஆம் தேதி 12 பேருக்கும், 19-இல் 20 பேருக்கும், 21 ஆம் தேதி 13 பேருக்கும், 22-இல் 19 பேருக்கும், 23 ஆம் தேதி 35 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஜூலை 23 ஆம் தேதியுடன் வா்த்தக நிறுவனங்கள் கடையடைப்பை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் வா்த்தக சங்கத்தினா் கூடிப் பேசி கடைகளை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறப்பது என்றும், கடைகளில் பணியாளா்கள் குறைவாக இருப்பது என்றும், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வலியுறுத்துவது என்றும் முடிவு செய்தனா்.

அதன்படி வெள்ளிக்கிழமை கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. உணவகங்கள், தேநீா் கடைகளில் பாா்சல் மட்டும் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT