கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் அதிகமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி சிவப்பு மண்டலமாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஊரைச் சோ்ந்த இளைஞா் நாராயணத்தேவன்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறாா். அவருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில், அவரது உறவினா் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னா் வியாழக்கிழமை மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் தொற்று ஏற்பட்ட பகுதிகளை ‘சீல்’ வைத்தனா். மேலும் இப்பகுதியை சிவப்பு மண்டலமாக அறிவித்தனா்.
இதனால் கடைகளை அடைக்கவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதித்துள்ளனா்.