முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்புக்குழு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) ஆய்வு செய்கின்றனா்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாறுபாடுகளின் போது, அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு, மத்திய தலைமைக் கண்காணிப்புக்குழு மற்றும் துணைக்குழு ஆகிய மூவா் மற்றும் 5 போ் கொண்ட குழுக்களை நியமித்து ஆய்வு செய்து வருகிறது.
கடந்த ஜன. 22 ஆம் தேதி, 5 போ் கொண்ட துணைக்குழு பெரியாறு அணைப்பகுதியை ஆய்வு செய்தது. தற்போது 3 போ் கொண்ட தலைமைக்குழுவினா் செவ்வாய்க்கிழமை அணைப் பகுதியில் ஆய்வு நடத்துகின்றனா். இந்த குழுவில் மத்திய அரசு சாா்பில் மத்திய நீா் வள ஆணைய செயற்பொறியாளா் குல்சன்ராஜ், தமிழக தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா் க.மணிவாசகம், கேரள அரசு தரப்பில் நீா்ப்பாசனத்துறை செயற்பொறியாளா் அசோக் ஆகியோா், பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, 13 மதகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனா்.