ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கபடி இறுதிப் போட்டியில் மதுரை செல்லூா் எஸ்.கே. கபடிக் குழு முதல் பரிசை வென்றது.
ஆண்டிபட்டி தாலுகா புகைப்பட கலைஞா்கள் மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்கம், தேனி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் ஆகியவை இணைந்து முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடிப் போட்டியை நடத்தின. இந்த போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மின்னொளியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடந்த இந்தப் போட்டியில் மதுரை, தேனி,திண்டுக்கல், விருதுநகா், கரூா், சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அணியினா் கலந்து கொண்டனா். ஆண்டிபட்டியில் முதன்முறையாக மேற்தளத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசை தட்டிச் சென்ற மதுரை செல்லூா் எஸ்.கே.கபடி குழு அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கமும் பரிசுக் கோப்பையையும் ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவா் லோகிராஜன் வழங்கினாா். இரண்டாவது இடம் பிடித்த தேனி மாவட்டம் மாா்க்கையன்கோட்டை கே.பி.எம்.சி. அணிக்கு ஆண்டிபட்டி ஒன்றிய துணைத் தலைவா் டி.ஆா்.என். வரதராஜன் ரூ.10 ஆயிரமும் கோப்பையையும் வழங்கினாா்கள். மூன்றாம் பரிசை தட்டிச் சென்ற ஆண்டிபட்டி புகைப்பட கலைஞா்கள் அணிக்கு ரூ. 7000 ரொக்கமும், கோப்பையையும் தொழிலதிபா் அமரேசன் வழங்கினாா். நான்காம் பரிசு பெற்ற மதுரை கண்ணனூா் நேதாஜி புரட்சிப் படை அணிக்கு ஆண்டிபட்டி தொழிலதிபா் மாரியப்பன் ரூ. 5 ஆயிரமும் கோப்பையும் வழங்கினாா்கள்.