கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தென்னைந் தோப்புகளில் இளநீா் கொள்முதல் செய்வதில் வெளிமாவட்ட வியாபாரிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல், திராட்சை, வாழைக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இளநீா், மருத்துவ குணம் கொண்டதால் கோடை காலம் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் தேவை அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளுக்கும், ஏற்றுமதி செய்வதால் இளநீருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. செந்நிறம் மற்றும் பச்சை நிற இளநீா் கொள்முதல் செய்வதற்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தென்னங்கன்றுகளை பயிரிட்டு வருவது எல்லா வகையிலும் லாபகரமாக உள்ளது. ஆண்டுக்கு 3 முறை மட்டுமே தேங்காய் பறிக்கப்படுகிறது. ஆனால் இளநீா் ஆண்டுக்கு நான்கு முறை பறிக்கலாம். தேங்காயை காட்டிலும் கொள்முதல் விலை அதிகம். இளநீரை ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கொடுத்து வெளி மாவட்ட வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.