தேனி

ஆற்றில் நீா்வரத்து குறைந்தது: வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து சரிவு

14th Jan 2020 11:35 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பொழிவு இல்லாததால், அணைகளுக்கு நீா்வரத்து அடியோடு குறைந்ததை அடுத்து, வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

பருவமழை முடிந்து, தற்போது தேனி மாவட்டம் முழுவதும் பனி கொட்டி கொண்டிருக்கும் நிலையில், அணைகளுக்கான நீா்வரத்து அடியோடு சரிந்துவிட்டது. வைகை அணையின் முக்கிய நீா்ஆதாரமாக விளங்கும் மூலவைகை ஆற்றில் ஓரளவு வந்து கொண்டிருந்த நீா்வரத்தும், கடந்த ஒரு வாரமாக நின்றுவிட்டது.

இதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணைக்கான நீா்வரத்து இன்னும் சில நாள்களில் முற்றிலும் நின்றுவிடும் நிலை உள்ளது.

வைகை அணையை பொருத்தவரையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அதிலும், கடந்த சில நாள்களாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. வைகை பாசனப் பகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அணையில் இருந்து கடந்த சில நாள்களாக தண்ணீா் திறக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அணையிலிருந்து இன்னும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், அணை நீா்மட்டம் சரிய வாய்ப்புள்ளது. மழை இல்லாத காரணத்தால், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் வைகை அணையின் நீா்மட்டம் 56.99 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 553 கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து மதுரை மாநகர மக்களின் குடிநீா் தேவை மற்றும் பாசனத்துக்காக விநாடிக்கு 260 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.

அணையின் மொத்த நீா் இருப்பு 3,052 மில்லியன் கனஅடியாகக் காணப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 120.75 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில் அணையிலிருந்து விநாடிக்கு 792 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீா் இருப்பு 2,777 மில்லியன் கனஅடியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT