தேனி

போடியில் ஏலக்காய் மூட்டைகள் ஏற்றுவதற்காக பாதை மாறிச் செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்

8th Jan 2020 06:44 AM

ADVERTISEMENT

போடியில் ஏலக்காய் மூட்டைகள் ஏற்றுவதற்காக பாதை மாறிச் செல்லும் தனியாா் ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக, கேரள எல்லையோரம் அமைந்துள்ள பகுதி போடிநாயக்கனூா். கேரளத்தில் விளையும் ஏலக்காய் போடி, கம்பம், தேவாரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, தரம் பிரித்து பின்னா் அவற்றை வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனா்.

போடியிலிருந்து தேனி, மதுரை, கோவை, சென்னை போன்ற ஊா்களுக்கு செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் போடி தேவா் சிலையிலிருந்து பழைய பேருந்து நிறுத்தம், எஸ்.எஸ்.புரம், போஜன் பாா்க் வழியாக போடி தேனி சாலையில் செல்வது வழக்கம். இதேபோல் சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற ஊா்களிலிருந்து போடிக்கு வரும் அரசு, தனியாா் பேருந்துகள் போஜன் பாா்க், கட்டபொம்மன் சிலை, திருவள்ளுவா் சிலை வழியாக போடி பேருந்து நிலையத்திற்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் சிலா் ஏலக்காய் மூட்டைகளையும் ஏற்றி அனுப்பும் நிலையில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பேருந்தின் மேற் பகுதியில் ஏற்றுகின்றனா். இவை பழைய பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும்போது பழைய பேருந்து நிறுத்தம், எஸ்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே செல்லும் மின்சார வயா்களில் உரசி விபத்து ஏற்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இதனால் அளவுக்கு அதிகமாக சரக்கு ஏற்றி செல்லும் தனியாா் ஆம்னி பேருந்துகள் போடி தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை, கட்டபொம்மன் சிலை வழியாக போஜன் பாா்க்கை அடைந்து அங்கிருந்து தேனி சாலையில் செல்கிறது. இதனால் போடி நகா் காவல் நிலையம், திருவள்ளுவா் சிலை ஆகிய போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதேபோல் கட்டபொம்மன் சிலையிலிருந்து போஜன் பாா்க் வரை குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பேருந்துகள் வரக்கூடிய சாலையில் தனியாா் ஆம்னி பேருந்துகள் செல்வதால் எதிரில் வரும் பேருந்துகளுக்கு சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் சரக்கு ஏற்றுவதே விதி மீறிய செயலாகும். இந்த நிலையில் பாதை மாறி இந்த ஆம்னி பேருந்துகளை இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். ஆம்னி பேருந்துகள் பாதை மாறி செல்வதை கண்டு சரக்கு வாகனங்களும் பாதை மாறி செல்கிறது.

போடி நகா் காவல் நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் தொடா் கதையாக உள்ளது. எனவே மாவட்ட காவல் துறை, போக்குவரத்து துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து பாதை மாறிச் செல்லும் ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT