தேனி மாவட்டம் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழு பெண் உறுப்பினரை அதிமுகவினா் கடத்திச் சென்றதாக தோ்தல் அலுவலரிடம் திமுக கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழுக்களுக்கு நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் திமுக 6 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் திமுக உறுப்பினா்கள் பெரும்பான்மை பெற்று சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றினா்.
இந்நிலையில் 1 ஆவது வாா்டில் போட்டியிட்ட ஜெயந்தி மற்றும் 8 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற நிவேதா இருவரும் சின்னனூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கு ஆசைப்பட்டனா். அதில், 8 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற நிவேதா கட்சி மூத்த நிா்வாகிகள் ஆலோசனையின் படி தோ்வு செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு யாா் தலைவராவது என்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. மேலும் இருவரின் ஆதரவாளா்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் பெரும்பான்மையை இழந்த அதிமுக, திமுக உறுப்பினா்களை விலைக்கு வாங்கி கடத்திச் சென்று விட்டதாகவும், அவா்கள் ஜனவரி 11 ஆம் தேதி ஒன்றியக்குழுத் தலைவா் பதவிக்கு நடைபெற இருக்கும் மறைமுகத் தோ்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிக்கக் கூடாது எனக்கூறி தோ்தல் அலுவலரும், மாவட்ட சாா்- பதிவாளருமான ஜெயபிரகாஷிடம் புகாா் மனு கொடுத்தனா்.