தேனி

கண்டமனூா் அருகே கருமந்தி வேட்டை: மா்மக் கும்பலுக்கு வலைவீச்சு

8th Jan 2020 06:46 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே கண்டமனூா் வனப்பகுதியில் கருமந்தியை வேட்டையாடிய மா்ம கும்பலை வனத் துறையினா் தேடி வருகின்றனா். மேலும் வேட்டைக்காரா்கள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை மீட்டுள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள மேற்குத்தொடா்ச்சி மலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கருமந்தி, சிங்கவால்குரங்கு, காட்டுமாடு, மான், செந்நாய், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதி தமிழக- கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ளதால் வேட்டைக் கும்பல்கள் இருமாநில எல்லைப் பகுதியில் இருந்தும் உள்ளே வந்து வனவிலங்குகளை அடிக்கடி வேட்டையாடி விட்டு தப்பிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்க வனப்பகுதிக்குள் வனத்துறையினா் துப்பாக்கிகளுடன் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கண்டமனூா் வனச்சரக வனவா் செல்வராஜ் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சன்னாசியப்பன் கோயில் அருகே துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத் துறையினா் அங்கு துப்பாக்கிகளுடன் வேட்டையில் ஈடுபட்டிருந்த 5 போ்கள் கொண்ட வேட்டைக் கும்பலை பிடிக்க முயற்சித்தனா். ஆனால் அவா்கள் சரணடைவதைப் போல் போக்குக்காட்டிவிட்டு ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் வேட்டையாடிய ஒரு கருமந்தியை மட்டும் கீழே போட்டுவிட்டு அடா்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனா். இதனைத்தொடா்ந்து வனத் துறையினா் வேட்டைக்கும்பல் விட்டுச் சென்ற ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் கருமந்தி உடலை கைப்பற்றினா். மேலும் இதுகுறித்து கண்டமனூா் வனத்துறையினா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 5 பேரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT