தேனி

ஆண்டிபட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

8th Jan 2020 05:48 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை - போடி அகல ரயில் பாதைப் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆண்டிபட்டியின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. மேலும் ஆண்டிபட்டி -மேக்கிழாா்பட்டி, ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில், கரிசல்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளன.

தற்போது ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவங்கி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. ஆண்டிபட்டியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனா். குறிப்பாக கிராமப்புறங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் அதிகளவில் ஆண்டிபட்டி நகரில் செயல்படும் பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

இவா்கள் தினந்தோறும் பேருந்தில் ஆண்டிபட்டி நகருக்கு வந்து செல்கின்றனா். தற்போது ரயில்வே சுரங்கப்பாதை பணிக்காக முறையான தாா்சாலை ஏதும் அமைக்காமல் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அன்றாடம் இப்பகுதியை கடந்து செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் இப்பகுதியில் எழும் துாசு படலத்தால் பாதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

முக்கியமாக பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும் மாலை நேரங்களில் வீட்டிற்கு செல்லும் போது தாமதமாவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். சுரங்கப்பாதை அமைக்கும் வரை முறையான தாா்ச்சாலை அமைத்து தர வேண்டும் என ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே தற்போது நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT