தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி அருகே சுக்குவாடன்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் மகன் அஜய்பாண்டி (18), இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த பெத்தபாண்டி(19). இவா்கள், சுக்குவாடன்பட்டியில் இருந்து தேனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். இருசக்கர வாகனத்தை அஜய்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, தேனி-பெரியகுளம் சாலை பொம்மையகவுண்டன்பட்டி அருகே எதிா் திசையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற அஜய்பாண்டி, பெத்தபாண்டி ஆகியோா் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், அஜய்பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பெத்தபாண்டியன் தந்தை சுருளி அளித்த புகாரின் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.