வருசநாடு அருகே 4 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் சென்ற கூலி தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (43). இவருக்கு திருமணமாகவில்லை. பெற்றோருடன் வீட்டில் வசித்து வந்தாா். இவா் கேரளத்தில் கூலி வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்தவா் அதன்பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவா் அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து முருகன் வேலைக்காக சென்றிருக்கலாம் என அவரது உறவினா் நினைத்திருந்தனா்.
இந்நிலையில் அதே ஊரைச் சோ்ந்த முத்துவேல் என்பவரது கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதை கண்ட அவா் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடலை மீட்டனா். மேலும் இறந்தவா் யாா் என நடத்திய விசாரணையில் 3 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற முருகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கடமலைக்குண்டு போலீஸாா் முருகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.