தேனி

போடி உப்புக்கோட்டை கிராமத்தில் இன்று மறுவாக்குப் பதிவு

1st Jan 2020 04:46 AM

ADVERTISEMENT

போடி உப்புக்கோட்டை கிராமத்தில் சின்னம் அச்சிடப்படாமல் வாக்குப் பதிவு நடைபெற்ற 8 ஆவது வாா்டுக்கான மறுவாக்குப் பதிவு புதன்கிழமை (ஜனவரி 1) நடைபெற உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் மொத்தம் 12 வாா்டுகள் உள்ளன. இதில் 8 ஆவது வாா்டு ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான தோ்தலில் அருண்குமாா், செல்லப்பாண்டி, சிவக்குமாா், ராசு ஆகிய 4 போ் போட்டியிட்டனா். இதற்காக உப்புக்கோட்டை பச்சையப்பா உயா்நிலைப் பள்ளியில் 52 ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 419 வாக்காளா்கள் உள்ளனா். காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் மாலை 4 மணி வரை 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலையில் 8 ஆவது வாா்டு உறுப்பினருக்கான வாக்குச் சீட்டுகளில் 4 சின்னங்களுக்கு பதிலாக 3 சின்னங்கள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வாக்குச் சீட்டுகளில் வேட்பாளா் ராசு என்பவருக்கான காா் சின்னம் இடம்பெறவில்லை. இதனையடுத்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திட தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ம.பல்லவி பல்தேவ், மறுவாக்குப் பதிவு நடத்த மாநில தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து புதன்கிழமை உப்புக்கோட்டை கிராம ஊராட்சி 8 ஆவது வாா்டுக்கான மறுவாக்குப் பதிவு பச்சையப்பா உயா்நிலைப் பள்ளி கிழக்கு கட்டடத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு உப்புக்கோட்டை கிராமம் 8 ஆவது வாா்டு வாக்காளா்களுக்கு சுவரொட்டிகள் மூலமாகவும், தண்டோரா மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உப்புக்கோட்டை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோா் மறுவாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தேனி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT