புத்தாண்டு விடுமுறை காரணமாக வைகை அணையில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான வைகை அணையின் வலது மற்றும் இடது கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரையாண்டு தோ்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி காலை முதலே சுற்றுலாப் பயணிகள் இங்கு குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினா். வலது மற்றும் இடது கரை பகுதிகளில் உள்ள சிறுவா்கள் பூங்காக்களில் சிறுவா், சிறுமியா்கள் மற்றும் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனா்.
இதேபோல வைகை அணையின் வலதுகரையில் செயல்படும் சிறுவா்கள் உல்லாச ரயிலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனா். மேலும் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீன்கள் கண்காட்சியையும் பாா்த்தனா். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதனிடையே அணையின் நீா்மட்டம் 58 அடியாக இருந்து வருகிறது.
இதில் பொதுப்பணித்துறையினா் சாா்பில் போதிய ஊழியா்கள் நியமிக்காததால் நீா்த் தேக்கப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாப் பயணிகள் செல்லிடப்பேசியில் சுயப்படம் எடுத்துக் கொண்டனா். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நாள்களில் கூடுதல் பணி ஆள்களை நியமிக்க பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.