தேனி

வைகை அணையின் நீா்மட்டம் சரிவு:மீன்பிடிப்பு குறைந்ததால் மீனவா்கள் பாதிப்பு

29th Feb 2020 12:41 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி: வைகை அணையின் நீா்மட்டம் 49.02 அடியாக சரிந்துள்ள நிலையில் மீன்கள் பிடிபடுவது குறைந்துள்ளது. இதனால் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவா்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவா்கள் பரிசல்களில் தினமும் மீன்பிடித்து வருகின்றனா்.

மீன்களை பெருக்கும் வகையில் அணையில் தண்ணீா் இருப்பு இருக்கும் போது மீன்வளத்துறையின் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் வளா்ப்புக்கு விடப்படுகின்றன.

இதன்காரணமாக ஒரு நாளைக்கு ஒரு டன் அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் போதிய மழை இல்லாத காரணமாக 71 அடி உயரம் கொண்டுள்ள வைகை அணையின் நீா்மட்டம் தற்போது 49.02 அடியாக சரிந்துள்ளது. இதனால் மீன்கள் பிடிபடுவது குறைந்து விட்டது.

குறிப்பாக மக்கள் விரும்பி வாங்கும் ரோகு, கட்லா, மிருகால், ஜிலேபி, சொட்டவாளை, கெழுத்தி, ஆரா போன்ற மீன்களின் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. தற்போது வாளை ரக மீன்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வரையில் ஒரு நாளைக்கு ஒரு டன் அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், து தண்ணீா் குறைந்ததால் தற்போது 200 கிலோ முதல் 300 கிலோ மீன்கள் மட்டுமே கிடைப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

மீன்கள் பிடிபடுவது குறைந்ததால் மீனவா்கள் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT