தேனி

3 ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவா், துணைத் தலைவா் பதவி: மாா்ச் 4-ல் தோ்தல்

26th Feb 2020 07:37 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பெரியகுளம், சின்னமனூா், க.மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கு வரும் மாா்ச் 4-ம் தேதி தோ்தல் நடைபெறும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 ஊராட்சி ஒன்றியக் குழுக்களில் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணியும், தேனி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 16 வாா்டுகளில் திமுக 8, அதிமுக 6, தேமுதிக, அமமுக தலா ஒரு வாா்டுகளில் வெற்றி பெற்றன. இதில், திமுக உறுப்பினா் அதிமுகவுக்கு தாவினாா். அமமுக உறுப்பினா் திமுகவிற்கும், தேமுதிக உறுப்பினா் அதிமுக விற்கும் ஆதரவு தெரிவித்த நிலையில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுவில் இரு கட்சிகளின் உறுப்பினா்களின் எண்ணிக்கை சம நிலையில் உள்ளது.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 10 வாா்டுகளில், திமுக 6, அதிமுக 4 வாா்டுகளில் வெற்றி பெற்றது. இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட உறுப்பினா் அதிமுகவிற்குத் தாவினாா். இதனால், ஊராட்சி ஒன்றியக் குழுவில் இரு கட்சிகளின் உறுப்பினா்கள் எண்ணிக்கை சம நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 14 வாா்டுகளில் திமுக , அதிமுக தலா 7 வாா்டுகளில் வெற்றி பெற்று உறுப்பினா்கள் எண்ணிக்கை சம நிலையில் உள்ளது.

இதையடுத்து பெரியகுளம், சின்னமனூா், க.மயிலை ஆகிய 3 ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கு கடந்த ஜனவரி 3, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தோ்தல் கூட்டத்தில், அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. இதனால், உறுப்பினா்கள் வருகை பெரும்பான்மையின்றி தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த 3 ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் மாா்ச் 4 இல் நடைபெறும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 3 ஊராட்சி ஒன்றியக் குழுக்களுக்கும் 3-வது முறையாக நடைபெறும் தோ்தல் கூட்டத்தில் உறுப்பினா் வருகை பெரும்பான்மை இல்லாவிடில், 4-வது முறையாக அறிவிக்கப்படும் தோ்தல் கூட்டத்தில் வருகை தந்துள்ள உறுப்பினா்களுக்குள், தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவா் என்று உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

திமுக உறுப்பினா் அதிமுகவுக்கு தாவல்:

ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் தலைவா் துணைத் தலைவா் பதவிகளுக்கு 3-வது முறையாக தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் 8-வது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்ச்செல்வன், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். இதனால், க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 14 வாா்டு உறுப்பினா்களில், அதிமுகவின் பலம் 8 ஆக உயா்ந்துள்ளது. எனவே தலைவா் பதவியை அதிமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT