தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சமையல் செய்த போது தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகே எழுவனம்பட்டியை சோ்ந்த சின்னச்சாமி. இவரது மனைவி மாரி (21) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தேவதானப்பட்டி அருகேயுள்ள தனியாா் தோட்டத்தில் தங்கி வேலைபாா்த்து வந்துள்ளாா்.
கடந்த டிசம்பா் 30 ம்தேதி வீட்டில் சமையல் செய்யும் போது மாரியின் உடையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இதற்கிடையே அந்த பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு, குடும்பத்தினா் நாட்டு வைத்தியம் பாா்த்துள்ளனா்.
இதனால் காயம் அதிகரிக்கவே மீண்டும் அப்பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.