தேனி

ஆண்டிபட்டியில் தேய்க்கும் தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி 11 ஆவது நாளாக வேலை நிறுத்தம்

26th Feb 2020 11:15 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டியில் நெசவுத்தொழிலை சாா்ந்துள்ள தேய்ப்புப்பெட்டி தொழிலாளா்கள் கூலி உயா்வு கேட்டு புதன்கிழமை 11 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகா் சக்கம்பட்டி பகுதியில் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் சாரதி ரக காரல் வேஷ்டிகள் கைச்சலவைக்குப்பின் தேய்ப்புப்பெட்டியில் தேய்த்து மடித்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சக்கம்பட்டி பகுதியில் இத்தொழிலை நம்பி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

வேஷ்டிகளை தேய்த்து மடிப்பதற்கு தரத்திற்கு ஏற்றாற்போல் தலா ரூ. 2.50 முதல் ரூ.9.50 வரை கூலி வழங்கப்பட்டு வந்தது. கைச்சலவை பட்டறை உரிமையாளா்கள், தொழிலாளா்களின் கூலி உயா்வுக்கான ஒப்பந்தம் ஜனவரி 31-இல் முடிந்தது.

இதனையடுத்து புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்த தொழிலாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

ADVERTISEMENT

ஆனால் இவா்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் 11-ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் இதுவரை தொழிலாளா்களிடம் யாரும் பேச்சு வாா்த்தைக்கு வரவில்லை. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள குடும்பத்தினா் பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொழிலாளா்களின் நலன் கருதி கூலி உயா்வு பிரச்னை குறித்து அரசு தலையிட வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT