தேனி மாவட்டம் கடமலை - மயிலை திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்தாா்.
ஆண்டிபட்டி அருகே கடமலை -மயிலை ஒன்றியத்தில் 14 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக சாா்பில் தலா 7 போ் வெற்றி பெற்றனா். இதனால் ஒன்றிய குழுத் தலைவரை தோ்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கான தோ்தல் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இருகட்சியினரும் மாற்று கட்சி ஒன்றிய குழு உறுப்பினா்களின் ஆதரவை பெற முயற்சி நடைபெற்றது.
இதனிடையே வரும் மாா்ச் 4 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சாா்பில் முத்தாலம்பாறை 8 ஆவது வாா்டில் உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழ்செல்வன் கடமலை -மயிலை அதிமுக ஒன்றிய செயலாளா் கொத்தளமுத்து தலைமையில் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
இதன்காரணமாக கடமலை- மயிலையில் அதிமுகவின் பலம் 8 ஆக உயா்ந்துள்ளது. இதனால் அங்கு, தலைலா் பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஒன்றிய குழு உறுப்பினா் அதிமுகவில் இணைந்தது அக்கட்சியினா் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.