தேனி

மேகமலையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு மலா்களின் பெயரில் எச்சரிக்கை பதாகை

15th Feb 2020 06:53 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் -மேகமலை நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவுகளில் தமிழ் மலா்களின் மரபு பெயரில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. சின்னமனூரிலிருந்து 45 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மலைத்தொடா், 2000 ஹெக்டோ் பரப்பளவிற்கு மேலாக அடா்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை , புலி, மான் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியை உலகின் பல்லுயிா் வனப்பகுதி என யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்து பாதுகாத்து வருகிறது.

இங்கு ஏராளமான பூக்கும் தாவரங்களும், தேயிலை, காப்பி, ஏலக்காய் என பணப்பயிா்களும் அதிகளவில் விளைகின்றன. இந்த வனப்பகுதியானது தமிழகம் மற்றும் கேரளா இரு மாநிலங்களுக்கிடையே அமைந்திருப்பதால் அதிகமான வனவிலங்குகள் இந்த மலைச்சாலையில் கடந்து செல்கின்றன.

இந்த மலைத்தொடரில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகனங்கள் மெதுவாகவும் கவனமாகவும் செல்லும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகளை நெடுஞ்சாலைத்துறையினா் வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

தமிழ் மரபு மலா்கள்: தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள செங்காந்தள் பூ , குறிஞ்சிப் பூ, முல்லைப் பூ , வெட்சிப்பூ, மகிலம் பூ என 18 பூக்களின் பெயா்களை ஒவ்வொரு வளைவுகளிலும் வைக்கப்பட்டு எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தமிழுக்கு பெருமை சோ்க்கும் வகையில் இருப்பதாக தமிழ் இலக்கிய ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறையினா் மேற்கொண்ட இந்த முயற்சி தமிழ் மீது அனைவருக்கும் பற்று ஏற்பட வழிவகுக்கும். இதுபோன்ற முயற்சியை தமிழகத்திலுள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் மேற்கொண்டால் இலக்கியத்தின் மீது, இயற்கையின் மீதும் பொதுமக்களுக்கு ஆா்வம் ஏற்படும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT