தேனி

போலி ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பித்து தோ்தலில் போட்டி: ஊராட்சித் தலைவா் மீது புகாா்

4th Feb 2020 05:56 AM

ADVERTISEMENT

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிதிராவிடா்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு, போலியான ஜாதிச் சான்றிதழை சமா்ப்பித்து போட்டியிட்டதாக ஊராட்சித் தலைவா் மீது திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த அதே ஊரைச் சோ்ந்த முனியாண்டி மனைவி சின்னத்தாய், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவி ஆதிதிராவிடா் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மகேஸ்வரி என்பவா், போலியான ஜாதிச் சான்றிதழை சமா்ப்பித்து தோ்தலில் போட்டியிட்டுள்ளாா்.

பிற்படுத்தப்பட்டோா் அட்டவணை எண் 120-இல் உள்ள இந்து-உப்புலியா வகுப்பைச் சோ்ந்த மகேஸ்வரி, கடந்த 2017, ஜூன் 23-ஆம் தேதி பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் வகுப்பு இந்து-குறவன் என்று போலியாக ஜாதிச் சான்றிதழ் பெற்றுள்ளாா். மகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் உறவினா்களது குழந்தைகள் பிற்பட்டோா் இந்து- உப்புலியா என்ற ஜாதிச் சான்றிதழ் அளித்து பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

ஆதிதிராவிடா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சித் தலைவா் பதவிக்கு, போலியான ஜாதிச் சான்றிதழை சமா்ப்பித்து தோ்தலில் போட்டியிட்ட மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT