தேனி, போடி மற்றும் செம்பட்டியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் திருக்குமரன்(49), உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியைச் சோ்ந்தவா்கள் பாலு(40), ஆனந்த்(25). இவா்கள், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 200 லாட்டரி சீட்டுகள், ரூ.5,750 பறிமுதல் செய்யப்பட்டது.
போடி: போடி குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் நகா் காவல் நிலைய போலீஸாா் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாண்டியை (76) கைது செய்தனா். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனா்.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சித்தையன்கோட்டையில் நுாா் (70), பழனிச்சாமி (55) ஆகியோா் கேரள மாநில லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனா். இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.