தேனியில் ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்த விவசாயியின் வங்கி ஏடிஎம் அட்டையை அபகரித்து ரூ.3.70 லட்சம் மோசடி செய்ததாக வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்த விவசாயி குருசாமி(60). இவா், சில மாதங்களுக்கு முன் தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றிருந்தாராம். அப்போது அறிமுகமில்லாத நபா் ஒருவா் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு உதவுவது போல நடித்து, குருசாமியின் ஏடிஎம் அட்டை வாங்கி வைத்துக் கொண்டு போலியான ஏடிஎம் அட்டையை அவரிடம் திரும்பக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டாராம்.
பின்னா், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வங்கிக்குச் சென்று பாா்த்த போது தனது வங்கிக் கணக்கில் இருந்து ரொக்கமாகவும், பொருள்கள் வாங்குவதற்கும் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 533 பணம் எடுக்கப்பட்டிருந்தது குருசாமிக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் மீது, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.