தேனியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து சனிக்கிழமை, அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி தனியாா் மன்ற அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.மகாராஜன், எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட பொறுப்பாளா் நா.ராமகிருஷ்ணன் பேசியது: திமுக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும், சட்டத் திருத்ததை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தேனியில், நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது.
அனைத்து நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெறும். இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்கின்றன என்றாா்.