ஊரக திறனாய்வுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள அனுப்பபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு சனிக்கிழமை கெளரவிக்கப்பட்டாா்.
அனுப்பபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி சந்தியா, ஊரக திறனாய்வுத் தோ்வில் 90 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இந்நிலையில் இப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி,
மாணவி சந்தியாவை கெளரவிக்கும் வகையில்
ஒரு நாள் தலைமை ஆசிரியராக அவரை நியமித்தாா். மாணவி சந்தியாவை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் பாராட்டினா். இப்பள்ளியில் ஊரகத் திறனாய்வுத் தோ்வு எழுதிய 12 பேரில் 10 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவி சந்தியா கூறியது: ஆசிரியா்
மணி, திறனாய்வு தோ்வுக்காக சிறப்பு பயிற்சிகள் அளித்தாா். மேலும் மாணவிகள் மீது அதிக அக்கறை கொண்டு, உற்சாகமும் , ஊக்கமும் அளித்தாா். ஆசிரியா் மணி மற்றும் தலைமையாசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கும் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.