வருசநாடு அருகே அரசு வழங்கிய கறவை மாடுகள் கொண்டு செல்வதற்கு வனத் துறை அனுமதி மறுத்துவிட்டதால், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே அரசரடி, பொம்மராஜபுரம், இந்திரா நகா், மஞ்சனூத்து உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு, தமிழக அரசு 3 நாள்களுக்கு முன் இலவச கறவை மாடுகளை வழங்கியது.
இதில், மொத்தம் 46 மாடுகளை கிராம மக்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனா். அப்போது, மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியில் மாடுகளை கொண்டு செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் சோ்ந்து வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டனா். மேலும், அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்தையும் சிறைப்பிடித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் மற்றும் வனத் துறையினா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, மாடுகளை கொண்டு செல்ல வனத் துறையினா் அனுமதி அளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
இது குறித்து மலைக் கிராம மக்கள் கூறியது: 3 தலைமுறைகளாக இந்த மலைக் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களை தடுத்து, இங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கிராமத்தில் இறந்தவா்களின் சடலங்களை புதைப்பதற்குக் கூட வனத்துறையினா் மறுப்பு தெரிவித்து வருகின்றனா். எனவே, இதற்கு தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களுடைய வாழ்வாதாரப் போராட்டம் தொடா்ந்து கொண்டே இருக்கும் என்றனா்.