காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, போடி அருகே துரைராஜபுரம் காலனியில் வியாழக்கிழமை இரவு விவேகானந்தா் இளைஞா் மன்றம் சாா்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் நேரு யுவ கேந்திரா அமைப்பின் கீழ் இயங்கும் பொட்டல்களம் விவேகானந்தா் இளைஞா் மன்றம் சாா்பில், துரைராஜபுரம் காலனியில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு, மன்றத் தலைவா் சி. பாஸ்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.
இதில், காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துரைராஜபுரம் காலனியை சோ்ந்த காவல் ஆய்வாளா் அய்யனாா், பொறியாளா் ராஜசேகா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை வழங்கினா். மேலும்,நேரு யுவ கேந்திரா அமைப்பின் நந்தகுமாா், தீபா மற்றும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் என பலா் பங்கேற்றனா்.